அண்ணாமலையார் கோயிலில் கலெக்டர் ஆய்வு. குழந்தைகளுடன் தவித்த பெண்களை தரிசனத்துக்கு அழைத்து சென்றார். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 20 August 2024

அண்ணாமலையார் கோயிலில் கலெக்டர் ஆய்வு. குழந்தைகளுடன் தவித்த பெண்களை தரிசனத்துக்கு அழைத்து சென்றார்.


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். எனவே பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கான நடவடிக்கைகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.             

திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் 19/8/24 அதிகாலை 2.28 மணிக்கு தொடங்கி 20/8/24 அன்று அதிகாலை 1.02 மணிக்கு நிறைவடைந்தது. அதனால் கடந்த 2 நாட்களாகவே திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்ததால் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனலே அண்ணாமலையார் கோயிலில் 19/8/24 அன்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீரென ஆய்வு நடத்தினார். 


அப்போது பக்தர்கள் வசதிக்காக அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் அம்மன் சன்னதி முன்பும் மாட வீதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த நிழற் பந்தல் வசதிகளை பார்வையிட்டார். மேலும் பக்தர்களுக்கு குடிநீர்,மோர் வழங்கினார். அதோடு நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க தேவையான ஏற்பாடுகள் செய்து,விரைந்து தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். 


மேலும் அம்மணி அம்மன் கோபுரம்  வழியாக அனுமதியின்றி முன்னுரிமை தரிசனத்திற்கு அனுமதிக்க கூடாது என கலெக்டர் தெரிவித்தார். அதனால் கிளி கோபுரம் பகுதியில் நெரிசல் ஏற்படுவதாலும் பொது தரிசன வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு நேரம் அதிகரிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ராஜகோபுரம் நுழைவு வாயிலில் தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 


அப்போது நீண்ட நேரம் வரிசையில் நிற்பதால் சிரமப்படுவதாக முதியவர்கள் குழந்தைகளுடன் வந்திருந்த தாய்மார்கள் தெரிவித்தனர். அதை தொடர்ந்து குழந்தைகளுடன் வரிசையில் காத்திருந்த தாய்மார்களை கோயில் 3ம் பிரகாரம்,கொடி மரம் அருகே ஒருங்கிணைத்து அங்கிருந்து நேரடியாக தரிசனதுக்கு கலெக்டரே முன்னின்று அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தார்.                        


சிறப்பு தரிசனம் வரிசை வழியாக சில நிமிடங்களில் தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்த தாய்மார்கள் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர். முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரைவு தரிசனம் செய்ய அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.                


ஆய்வின் போது கோயில் இணை ஆணையர் ஜோதி,அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.       


- அ.மு. முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை

No comments:

Post a Comment

Post Top Ad