சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் ராமமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டத்தின் கீழ் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை 09-8-24 அன்று தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் தொடங்கி வைத்தார். அப்போது பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள்,அரசு உயர் அதிகாரிகள் என பலர் உடனிருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த திட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடங்கும் விழா திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது.
எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி,ஓ.ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் சரண்யா வரவேற்றார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலம் பயன் பெறும் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டை உயர் கல்விக்கான வழிகாட்டுதல் புத்தகத்தையும் வழங்கினார். முன்னதாக அவர் பேசியதாவது:- அனைவரையும் சான்றோர் ஆக்குக்கின்ற உன்னதமான திட்டம் தமிழ்ப்புதல்வன் திட்டம். தமிழக முதல் அமைச்சரால் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு உயர்கல்வி உறுதி திட்டம் தொடங்கப்பட்டது.
தற்போது இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்ப்புதல்வன் திட்டம் என்னும் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, திருவண்ணாமலை மாவட்டத்தில் முதற்கட்டமாக 87 கல்லூரிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 796 மாணவர்கள் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்வி பயிலும் வரை மாதம் ரூ.1000/- உதவித் தொகை பெற்று பயனடைவார்கள். திருவண்ணாமலை மாவட்டம் கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக உள்ளதால், மாணவர்கள் உயர் கல்வி தொடர்வதற்கு இந்த உதவித் தொகை பேருதவியாக அமையும்.
சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை மாற்றி சமூக நீதியை வழங்கக் கூடிய உன்னதமான ஆயுதம் கல்வி. கல்வி கற்பதன் வாயிலாக மட்டும் வாழ்வில் உயர முடியும். உலகை மாற்றக் கூடிய மிகச் சிறந்த ஆயுதம் கல்வி தான். அத்தகைய கல்வியை கற்கின்ற மாணவர்கள் இடைநின்றாத படி தொடர்ந்து கல்வியை மேற்கொள்ள வேண்டும். இந்த உதவித் தொகை மூலமாக உயர் கல்வி தொடங்குவதற்கு தேவையான புத்தகங்களை வாங்குவதற்கும், போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு தேவையான பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் பயன்படுத்தினால் உங்கள் எதிர்காலம் சிறப்பானதாக அமையும். எனவே மாணவர்களாகிய நீங்கள் இந்த உதவித் தொகையை சிறப்பான முறையில் பயன்படுத்த வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இதில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷமூர்த்தி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் அருண் பாண்டியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கவுரி, திருவண்ணாமலை ஓன்றிய குழுத் தலைவர் கலைவாணி கலைமணி, நகர்மன்றத் தலைவர் நிர்மலா வேல்மாறன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனுவாசன், திமுக நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்லூரி முதல்வர்கள், வங்கி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
- அ.மு. முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை.
No comments:
Post a Comment