திருவண்ணாமலை மாவட்டத்தில் சிவில் சப்ளைஸ் துறை மூலம் 10 குடோன்கள் உள்ளன. கடந்த ஆண்டு 56109 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. போளூர், கீழ்பெண்ணாத்தூரில் புதிய குடோன்கள் கட்டப்பட்டு வருகிறது.மேலும் இந்த மாவட்டத்தில் 17670 மெட்ரிக் டன் அரிசி,1092 மெட்ரிக் டன் சக்கரை, 417 மெட்ரிக் டன் கோதுமை இருப்பு உள்ளது. ரேஷன் கடைகளில் கடந்த ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தற்பொழுது வழங்கப்பட்டு வருகிறது.
தேர்தல் நடைமுறை காரணமாக மாதந்தோறும் கொள்முதல் என்ற நடைமுறையால் பருப்பு,பாமாயில் கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தை சீர் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். அதன்படி,40 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்ய ஆர்டர் போடப்பட்டுள்ளது. அதேபோல் 2.09 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. எனவே அடுத்த 10 அல்லது 15 நாட்களில் துவரம் பருப்பு பாமாயில் விநியோகம் சீர் செய்யப்படும். வாடகை கட்டிடங்களில் உள்ள ரேஷன் கடைகளை சொந்த கட்டிடங்களுக்கு மாற்றவும்,தேவையான இடங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கவும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
ரேஷன் கடைகளில் அரிசி பற்றாக்குறை இல்லை. கோதுமை ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு குறைவாக வழங்குகிறது. ரேஷன் கடைகளில் சோப்பு,டீ தூள் போன்ற பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்த கூடாது என தெரிவித்திருக்கிறோம், உணவு பொருள் கடத்தல் தடுப்பு சிஐடி பிரிவு எடுத்த நடவடிக்கையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 22 ஆயிரம் டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் சுமார் 6 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வேளாண் கடன் வழங்குவதில் திருவண்ணாமலை மாநில அளவில் முதலிடத்தில் இருக்கின்றது. கடந்த ஆண்டு ரூ.905 கோடி வேளாண் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதனால் 1.19 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 36,613 பேருக்கு ரூ.254 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அதோடு கடந்த ஆண்டு மட்டும் ரூ.3428 கோடி மதிப்பில் அனைத்து வகையான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனால் சுமார் 1.50 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். புதிய ரேஷன் கார்டுக்களுக்கான விண்ணப்பங்கள் அரசு நடத்தும் முகாம்கள் மூலம் பெறப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டுகளை முறைப்படுத்தும் பணி தொடர்ந்து நடக்கிறது. 4.54 லட்சம் போலி கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒரு நபர் கார்டுகளில் இறந்தவர்களின் பெயர்களில் இருந்த 4.49 லட்சம் கார்டுகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின் போது டிஆர்ஓ ராமபிரதீபன்,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் ஜெயம்,கூட்.டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பார்த்திபன் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை
No comments:
Post a Comment