வண்டல் மண் படிந்துள்ளதால் நீர் இழப்பு, சாத்தனூர் அணையை தூர் வாரி சீரமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்களவையில் எம்பி அண்ணாதுரை வலியுறுத்தல். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 31 July 2024

வண்டல் மண் படிந்துள்ளதால் நீர் இழப்பு, சாத்தனூர் அணையை தூர் வாரி சீரமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்களவையில் எம்பி அண்ணாதுரை வலியுறுத்தல்.


சாத்தனூர் அணையை தூர் வாரி சீரமைத்து அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் எம்பி. சிஎன். அண்ணாதுரை வலியுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் முக்கியமான அணைகளில் திருவண்ணாமலை மாவட்டம்,தண்டராம்பட்டு தாலுகாவில் அமைந்துள்ள சாத்தனூர் அணை முக்கியமானதாகும். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சாத்தனூர் அணை கடந்த 1957ம் ஆண்டு கட்டப்பட்டது.                    

சாத்தனூர் அணை நீர் பாசனத்தை நம்பி திருவண்ணாமலை மாவட்டத்தில் 17,647 ஏக்கர் பரப்பளவிலும்,விழுப்புரம் மாவட்டத்தில் 43  ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் விவசாய சாகுபடி நடைபெறுகிறது. அதோடு வலது புற கால்வாய் பாசனத்தை நம்பி 48 ஏரிகளும், இடது புற கால்வாய் பாசனத்தை நம்பி 40 ஏரிகளும் உள்ளன. அணை நிரம்பினால் மட்டுமே இந்த ஏரிகள் நிரம்பும். அதை சார்ந்துள்ள விவசாயம் நடைபெறும், விவசாய பாசனம் மட்டுமின்றி திருவண்ணாமலை, செங்கம், புதுப்பாளையம், தானிப்பாடி, வாடவரம், வானாபுரம் உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் தேவை சாத்தனூர் அணையை நம்பி தான் உள்ளது. 


இந்நிலையில் சாத்தனூர் அணை பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட 1957ம் ஆண்டில் அணையின் நீர் கொள்ளளவு 4,600 மில்லியன் கன அடியாக இருந்தது. இரண்டாம் கட்ட அணை கட்டுமான பணிகள் நிறைவடைந்த 1968ம் ஆண்டு அணை நீர் போக்கி கதவுகள் அமைத்து நீர் கொள்ளளவு 8,100 மில்லியன் கன அடியாக உயர்த்தப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் வண்டல் மண் படிந்து அணையின் நீர் மட்டம் 7,321 மில்லியன் கன அடியாக குறைந்திருக்கிறது.எனவே மீண்டும் அணையை தூர் வாரி சீரமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாகும்.          


இந்நிலையில் மக்களவையில் 30/7/24 அன்று கேள்வி நேரத்தின் போது பேசிய திருவண்ணாமலை தொகுதி திமுக எம்பி சி.என். அண்ணாதுரை,சாத்தனூர் அணையை தூர் வாரி சீரமைக்க வலியுறுத்தியுள்ளார், இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது:- சாத்தனூர் அணை பெண்ணையாறு எனப்படும் தென்பெண்ணையாறு குறுக்கே கட்டப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் மிக பெரிய அணைகளில் இதுவும் ஒன்றாகும். திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை உள்ளது.


எனவே சாத்தனூர் அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்ற வேண்டும். அணையை தூர் வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் பைப் லைன்கள் அமைத்து சாத்தனூர் அணையிலிருந்து குடிநீர் விநியோகம் செய்ய ஜல் சக் தி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.            


- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad