திருவண்ணாமலை புகழ் பெற்ற ஆன்மிக நகரமாகும். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக அமைந்துள்ள அண்ணாமலையார் திருக்கோயிலை தரிசிக்கவும் கிரிவலம் செல்லவும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக வெகுவாக அதிகரித்து வருகிறது. எனவே பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதும் அண்ணாமலையார் கோயில்,கோயிலுக்கு செல்லும் கிரிவலப் பாதை உள்ளிட்ட இடங்களில் உள் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதும் அவசியமாகியுள்ளது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் ஆகியோர் 08-6-24 அன்று ஆய்வு செய்தனர்.
கிரிவலப் பாதையில் ஈசான்ய லிங்கம் பகுதியிலிருந்து தொடங்கிய ஆய்வுப் பணி,கிரிவலப் பாதை அமைந்துள்ள 14 கி.மீ.தூரமும் நடந்தது. அப்போது கிரிவலப் பாதையில் 21 இடங்களில் புதியதாக நவீன கழிப்பறை வசதிகள் அமைக்கும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. மேலும் கிரிவலப்பாதையில் குடிநீர் வசதிகளை கூடுதலாக எந்தெந்த இடங்களில் அமைப்பது பக்தர்கள் ஓய்வு அறைகள் அமைப்பது குறித்தும் ஆய்வு நடந்தது.
திருவண்ணாமலைக்கு வருகை தரும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்கள் தங்குவதற்கான வசதிகள் போதுமானதாக இல்லை. தற்போது கிரிவலப் பாதையில் அண்ணா நுழைவு வாயில் அருகே ஈசானிய மைதானத்தில் அமைந்துள்ள யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில் உள்ள அறைகள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் நிரம்பி விடுகின்றன.எனவே கூடுதல் ஆக மேலும் ஒரு யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதையொட்டி,திருவண்ணாமலை, செங்கம் சாலை சந்திப்பு பகுதியில் அத்தியந்தல் பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் புதிய யாத்ரி நிவாஸ் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.
அதற்கான திட்ட மதிப்பீடு விரைவில் தயாரித்து அரசின் ஒப்புதல் பெற்று பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் யாத்ரி நிவாஸ் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தால் சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கர்நாடாகா மாநிலத்திலிருந்து வரும் பக்தர்கள் பயன் பெறமுடியும். ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் ரிஷப்,கோயில் இணை ஆணையர் ஜோதி,அறநிலைய்த்துறை மண்டல இணை ஆணையர் சுதர்ஷன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
அதனை தொடர்ந்து அண்ணாமலையார்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், தரிசன வரிசையை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் ஆய்வு செய்தார்.
- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment