திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் 1433ம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு 27-6-24 அன்று மாலை தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்தது. வருவாய் தீர்வாயம் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆர்.மந்தாகினி தலைமை தாங்கி நலத் திட்ட உதவிகள் வழங்கி விழா பேருரையாற்றினார்.
அவர் பேசும் போது:- மக்களிடம் நேரடியாக சென்று அவரவர்களுடைய குறைகளை கேட்டு தீர்வு காண வேண்டும் என்பதற்காக தான் இது போன்ற விழாக்கள் நடத்தப்படுகின்றது. திருவண்ணாமலை தாலுகாவில் 7 குறு வட்டங்களை சேர்ந்த கிராம மக்களிடமிருந்து கடந்த 7 நாட்களாக மனுக்கள் பெறப்பட்டு அதில் 318 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு நலத் திட்ட உதவிகள் இன்றைய தினம் வழங்கப்படுகிறது. தினந்தோறும் காலை 8 மணிக்கே தனக்கு கீழ் பணியாற்றும் ரெவினியூ அதிகாரிகளிடம்,பொது மக்களிடமிருந்து பெறுகின்ற மனுக்களின் நிலை என்ன என கேட்டறிந்து, மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆணையிடுவேன்.
என்னுடைய மேலாதிகாரிகள், கலெக்டர், தலைமை செயலாளர் உட்பட, பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் தாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர். அதேபோல் நமது முதலமைச்சர் அவர்களும்,நமது பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களும் பொதுமக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க வலியுறுத்துகின்றனர்.அதன்படியே நாங்கள் செய்து வருகின்றோம். இவ்வாறு அவர் பேசினார்.
திருவண்ணாமலை ஒன்றிய குழு தலைவர் திருமதி கலைவாணி கலைமணி முன்னிலை வகித்தார். குடிமைப்பொருள் தாசில்தார் கே.துரைராஜ்,வட்ட துணை ஆய்வாளர் பெ.தரணிவாசன், விவசாய சங்க பிரதிநிதிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். தனி வட்டாட்சியர் (ச.பா.தி.) திருமதி ச.பரிமளா நன்றியுரையாற்றினார். நாட்டுப்பண் பாடி விழா இனிதே நிறைவுற்றது.
- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment