ஆரணி மக்களவை தொகுதியில் மொத்தம் 14,96,118 வாக்களர்கள் உள்ளனர். நடந்து முடிந்த தேர்தலில் 11,33,520 வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்குப்பதிவு சதவீதம் 75.36 ஆகும். இந்நிலையில் ஆரணி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலையில் உள்ள சண்மூகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான பிரியதர்ஷினி, தேர்தல் பார்வையாளர் சுஷாந்த் கவுரவ் தலைமையில் 04-6-24 அன்று நடந்தது.
காலை 8.10 மணியளவில் வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குகள் எண்ணும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியதர்ஷினி, பொது பார்வையாளர் சுஷாந்த் கவுரவ் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து 8.30 மணியளவில் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் சட்டமன்ற தொகுதி வாரியாக தொடங்கியது, வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று தொடங்கி 23வது சுற்று வரை ஒவ்வொரு சுற்றிலும் திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் முன்னிலை வகித்தார்.
அதன்படி இறுதி சுற்றில் திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் 4,99,276 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரன் 2,90,716 வாக்குகளும், பாமக வேட்பாளர் ஏ.கணேஷ்குமார் 2,35,963 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கு.பாக்கியலட்சுமி 66,723 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவுக்கு 9,175 வாக்குகளும் பதிவாகி இருந்தது.
இந்நிலையில் திமுக வேட்பாளர் எம்.எஸ். தரணிவேந்தன் 2,08,560 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியதர்ஷினி அறிவித்தார். தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான வெற்றிச் சான்றிதழை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுக வேட்பாளர் எம். எஸ். தரணிவேந்தன் பெற்றுக்கொண்டார்.
- அ.மு. முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை
No comments:
Post a Comment