ஆரணி அருகே அரசு சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் அதிரடி கைது. உடந்தையாக இருந்த இரவு காவலரும் சிக்கினார்.. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 16 June 2024

ஆரணி அருகே அரசு சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் அதிரடி கைது. உடந்தையாக இருந்த இரவு காவலரும் சிக்கினார்..


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ராமச்சந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (50) இவர் அமிர்தி பகுதியில் கேன்டின் எடுத்து நடத்தி வருகிறார். மேலும் ஊராட்சி பகுதிகளில் அரசு கட்டிட பணிகள் சம்பந்தமாக ஒப்பந்த டெண்டர் எடுத்து பணி செய்யும் ஒப்பந்ததாராக உள்ளார். இந்நிலையில் கண்ணமங்கலம் பகுதியிலேயே அரசு ஒப்பந்த டெண்டர் ரூ.20 லட்சத்தில் எடுத்துள்ளார்.இதற்கு அரசு சொத்து மதிப்பு சான்று கோரி ஆரணி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.


துணை தாசில்தார் வருவாய் ஆய்வாளர்,விஏஓ மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அரசு சொத்து மதிப்பு சான்று வழங்கப்படும். இந்த சான்றுவழங்குவதற்காக துணை தாசில்தாருக்கு ரூ.10 ஆயிரம்,வருவாய் ஆய்வாளருக்கு ரூ.10 ஆயிரம், விஏவுக்கு ரூ.5 ஆயிரம் சீனிவாசன் லஞ்சமாக கொடுத்துள்ளார். இந்த லஞ்சத்தை பெற்றுக்கொண்டவர்கள் சான்றுக்கு பரிந்துரை செய்து, தாசில்தாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து  சீனிவாசன் தாலுகா அலுவலகத்திற்கு சென்று சான்றிதழ் குறித்து கேட்டுள்ளார். 


அப்போது தாசில்தார் மஞ்சுளா ரூ.1 லட்சத்துக்கு ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பணம் கொடுத்தால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் என்று தாசில்தார் கறாராக தெரிவித்துள்ளார். அதோடு தாசில்தார் மஞ்சுளா இரவு காவலர் பாபு என்பவரை சீனிவாசனிடம் அனுப்பி பேரம் பேசியுள்ளார். அப்போது ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தான் சான்று வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.        


இதற்கு ஒப்புக்கொண்ட சீனிவாசன் பணத்தை தயார் செய்து விட்டு வருவதாக கூறி விட்டு சென்றார். ஆனால் பணம் கொடுக்க விரும்பாத சீனிவாசன் இது குறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.10 ஆயிரத்தை 14-6-24 அன்று சீனிவாசனிடம் கொடுத்து அனுப்பினர். சீனிவாசனிடமிருந்து ரூ.10 ஆயிரம் பணத்தை இரவு காவலர் பாபு பெற்றுக்கொண்டு தாசில்தார் மஞ்சுளாவிடம் கொடுக்க முயன்றார். அப்போது அங்கு மறைந்திருந்த திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வேல்முருகன், இன்ஸ்பெக்டர் மைதிலி ஆகியோர் தலைமையிலான 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தாரையும் காவலாளி பாபுவையும் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சான்றிதழ் வழங்குவதற்கு மஞ்சுளா இரவு காவலர் பாபு மூலம் பேரம் பேசி ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. 


இதனைய்டுத்து தாசில்தார் மஞ்சுளா இரவு காவலர் பாபு ஆகிய இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து பணம் வாங்கிய துணை தாசில்தார்,வருவாய் ஆய்வாளர்,விஏஓ விடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.                  


- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad