சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு, 17 ஆண்டுகளுக்கு முன், விழுப்புரம் வழியாக, மீட்டர்கேஜ் பாதையில் ரயில் இயக்கப்பட்டது.அகல பாதை மாற்றப்பட்டதால், அந்த சேவை நிறுத்தப்பட்டது.பொதுமக்கள், பக்தர்கள், வியாபாரிகள் சென்னைக்கு நேரடி ரயில் இயக்க கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சென்னை பீச் ஸ்டேஷனிலிருந்து, வேலுார் கன்டோன்மென்ட் வரை இயக்கப்படும் தினசரி பாசஞ்சர் ரயில், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணி முதல் திருவண்ணாமலை வரை நீட்டித்து இயக்கப்பட்டது.நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு சென்னை கடற்கரை ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டு, நள்ளிரவு, 12:05 மணிக்கு ரயில் திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷன் வந்தடைந்தது. மீண்டும் அதிகாலை, 4:00 மணிக்கு புறப்பட்டு காலை, 9:50 மணிக்கு சென்னை கடற்கரை ஸ்டேஷன் சென்றடையும் வகையில் ரயில் இயக்கப்பட்டது.
நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து ரயில் புறப்பட்டதை முன்னிட்டு, அகில பாரத கிராஹக் பஞ்சாயத்து தென்னிந்திய அமைப்பு செயலர் சுந்தர், திருவண்ணாமலை மாநகர ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் மற்றும் வியாபாரிகள் இணைந்து, ரயில் டிரைவருக்கு அருணாசலேஸ்வரர் போட்டோ வழங்கி கவுரவித்தனர்.ரயிலுக்கு பூக்கள் தூவி, 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற கோஷத்துடன் திருவண்ணாமலையிலிருந்து, சென்னைக்கு, பொதுமக்கள் ரயில் சேவையை துவக்கி வைத்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக -செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment