திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதி வாக்கு எண்ணிக்கைதேர்தல் பார்வையாளர் அங்கீகரித்த பிறகே முடிவுகள் வெளியிடப்படும், ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் தகவல். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 23 May 2024

திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதி வாக்கு எண்ணிக்கைதேர்தல் பார்வையாளர் அங்கீகரித்த பிறகே முடிவுகள் வெளியிடப்படும், ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் தகவல்.


மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி முதற்கட்ட வாக்குப் பதிவின் போது தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 19ந் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது வரும் 4ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.    
    

அதன்படி திருவண்ணாமலை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டியிலும்,ஆரணி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது. அதையொட்டி அங்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.      


இந்நிலையில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.அதையொட்டி வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் நடைமுறை குறித்த ஆய்வுக் கூட்டம் 22ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது.                

அதில் ஆரணி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் டிஆர்ஓ பிரியதர்ஷினி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களான செய்யாறு உதவி கலெக்டர் பல்லவி வர்மா,ஆர்டிஓ மந்தாகினி,கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன்,தாசில்தார் சாப்ஜான்,மாவட்ட தகவலியல் அலுவலர் சிசில் இளங்கோ உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.                   


ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாவது, திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தனித்தனி மையங்களில் நடக்கிறது. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அறையிலும் 14 மைசைக்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு சுற்றுக்கும் எந்தெந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எண்ணப்படுகிறது என்பதனை கண்காணிக்க உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் கீழ் ஒரு தாசில்தார் பணியில் ஈடுபடுவார்.                   


வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மீண்டும் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 2 நுண் பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள். வாக்கு எண்ணும் நாளன்று (4ந் தேதி)காலை 8 மணி வரை வரும் தபால் வாக்குகள் மட்டும் எண்ணிக்கைக்கு ஏற்கப்படும். அதன்பிறகு வரும் தபால் வாக்குகள் தள்ளுபடி செய்யப்படும்.ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை முடிவுகளையும் முறையாக தேர்தல் ஆணையத்திற்கு உடனுக்குடன் ஆன்லைனில் பதிவேற்றி அனுப்ப வேண்டும். தேர்தல் பொது பார்வையாளரின் ஒப்புதல் பெற்ற பிறகே ஒவ்வொரு சுற்று முடிவும் தகவல் பலகையில் வெளியிடப்படும்.            


எனவே உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒவ்வொரு சுற்று முடிந்ததும், வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் அதற்கான படிவங்களில் பதிவு செய்து உடனுக்குடன் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளருக்கு அனுப்ப வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு விரைவில் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.    அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad