வரும் 4ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறைகளில் வைக்க ஏற்பாடு. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 25 May 2024

வரும் 4ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறைகளில் வைக்க ஏற்பாடு. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு.


திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார். திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 4ந் தேதி நடைபெறவுள்ளது.

திருவண்ணாமலை தொகுதியில் 1722 மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களும்,ஆரணி தொகுதியில் 1760 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு தொகுதியிலும் 21 சுற்றுகள் வாக்கு எண்ணப்பட உள்ளன. எனவே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை அன்று இரவுக்குள் முழுமையாக முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை 45 நாட்கள் வரை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணைய நடைமுறை காரணமாக வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு மீண்டும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திங்களுக்கு சீல் வைத்து பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட உள்ளன. அதையொட்டி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கிடங்கின் தரைதளம் மற்றும் முதல் தளத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் 24-5-24 அன்று நேரடி ஆய்வு செய்தார்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள திருவண்ணாமலை, செங்கம், கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், போளூர், செய்யாறு, வந்தவாசி ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு கிடங்கில் தனித்தனி அறைகளில் வைக்கப்படவுள்ளன. அதேபோல் திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூர் மாவட்டத்திலும், ஆரணி மக்களவை தொகுதிக்குட்பட்ட மயிலம், செஞ்சி சட்டமன்ற தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் விழுப்புரம் மாவட்டத்திலும் உள்ள பாதுகாப்பு கிடங்கிலும் வைக்கப்பட உள்ளன.


ஆய்வின் போது டிஆர்ஒ பிரியதர்ஷினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கோ. குமரன், தாசில்தார் சாப்ஜான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை 

No comments:

Post a Comment

Post Top Ad