கடினமான முயற்சிகளால் தான் சாதனைகள் புரிய முடியும், மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல், கடினமான முயற்சிகளினால் தான் சாதனைகள் புரிய முடியும். வெற்றி பெற திட்டமிடல் அவசியம் என பிளஸ்2 மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2ம் கட்டமாக 'என் கல்லூரிக் கனவு' என்ற மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது. மாவட்ட தாட்கோ மேலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார். மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் எஸ். சாந்தி வரவேற்றார்.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது :- மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை சார்பாக பிளஸ் 2 பயின்ற மாணவர்களுக்கு 'என் கல்லூரிக் கனவு' என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலைமாவட்டத்தில் உள்ள எஸ்சி. எஸ்டி மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உயர்கல்வி படிப்பதற்கு அரசு உதவித் தொகை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும், மாணவர்களுக்கு உள்ள கேள்விகளுக்கு அவர்கள் புரிந்துக் கொள்ளும் அளவிற்கு விரிவாக இந்நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் பிளஸ் 2 வகுப்பிற்கு பிறகு உயர்கல்வி பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள பட்ட,பட்டய பாடப்பிரிவுகள் மற்றும் விரைவில் அரசு பணி மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்பு குறித்து விரிவான விளக்கத்தினை மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. வாய்ப்புகள் பல உள்ளன அதனை சரியான முறையில் பயன்டுத்துகிறோமா,எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்ன வாய்ப்புகள் உள்ளன,அதன் முலம் நம் வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற வேண்டும் என்பது தான் இந்த வழிகாட்டல் நிகழ்ச்சியின் அடிப்படை நோக்கமாகும்.
மாணவர்களுக்கு அடுத்து வருகின்ற 5 ஆண்டு காலம் மிகப்பெரிய உன்னதமான கால கட்டம். இந்த கால கட்டத்தில் நாம் கடுமையாக திட்டமிட்டு முயற்சி செய்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும். நமக்கான கால கட்டம் எது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். நாம் வாழும் போது 4 பேர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். போட்டித் தேர்வுகள் மூலமாக பல்வேறு பதவிகளை அடைய முடியும். பல வங்கிகள் தொழில் தொடங்குவதற்கு கடனுதவிகளை வழங்கி வருகிறது.
அதனை பயன்படுத்தி கடுமையாக உழைத்தால் தொழில் அதிபர்களாக மாற முடியும். தொழில்நுட்பம் தொடர்பான படிப்புகளை படித்து விட்டு தொழில் தொடங்கி பல நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கலாம். புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து காப்புரிமை வாங்குவதன் மூலம் அதிக வருமானம் ஈட்டலாம். போட்டி தேர்வு மட்டுமின்றி தொழில் முனைவோர், வேளாண்மை மற்றும் பல துறைகளிலிருந்து ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
நாம் மாறுவது மட்டுமில்லாமல், இந்த உலகத்திற்கு என்ன நன்மைகள் செய்ய முடியும்.என்ன மாற்றங்கள் கொண்டு வர முடியும் என்பதை பற்றி நினைத்து பார்க்க வேண்டும். முன்னேறிய நபர்கள் ஒரே நாள் இரவில் முன்னேறியிருக்க மாட்டார்கள். அதற்காக கடுமையாக உழைத்திருப்பார்கள். திட்டமிட்டு இருப்பார்கள். செயல்படுத்தியிருப்பார்கள். தோல்விகள் வந்தாலும் துவளாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்திருப்பார்கள். சிறிய சிறிய திருத்தங்கள் செய்திருப்பார்கள்.
கடினமான முயற்சிகள் மூலம் சாதனைகள் புரிய முடியும். வெற்றி பெற திட்டமிடுதல் முக்கியம்.கடினமான சூழ்நிலைகளை வலிமையாக எதிர்கொள்ள வேண்டும். சோதனைகள் வரும் போது அதனை கடந்து செல்லுங்கள்.உலகம்நிறைய வாய்ப்புகள் வைத்திருக்கிறது, இவ்வாறு அவர் பேசினார்.
இதில் எம்எம்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர்.
- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர் திருவண்ணாமலை
No comments:
Post a Comment