பா.ஜ.க. ஆண்டதும் போதும். மக்கள் மாண்டதும் போதும்.திருவண்ணாமலை பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 4 April 2024

பா.ஜ.க. ஆண்டதும் போதும். மக்கள் மாண்டதும் போதும்.திருவண்ணாமலை பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.


பக்தர்கள் போற்றும் அரசாகவும், அற்பர்கள் கதறும் அரசாகவும் நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது. மக்களை பண்டுத்த தான் ஆன்மீகத்தை பயன்படுத்த வேண்டுமே தவிர பா.ஜ.க.போன்று மக்களை பிளவுப்படுத்த பயன்படுத்தக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.   
                 

திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:- தமிழ்நாட்டைப் போல தில்லியிலும் ஒரு நல்லாட்சி அமைய வேண்டும் என்று தான் உங்கள் ஆதரவை கேட்டு வந்திருக்கிறேன், இந்தியாவில் சமூக நீதி நீடிக்க வேண்டும். ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்.வேற்றுமையில் ஒற்றுமை காணப்பட வேண்டும்.எங்கும் சமத்துவம் தழைக்க வேண்டும். 


அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும். நம் நாட்டின் பன்முகத் தன்மை தொடர வேண்டும்.அதற்கு பாஜக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். ஏன் என்றால்,"பா.ஜ.க. ஆண்டதும் போதும்,மக்கள் மாண்டதும் போதும் " என்று இந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் தயாராகி விட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள் என்று நானும் ஒவ்வொரு மேடையிலும் கேட்கிறேனே,பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு செய்த சிறப்பு திட்டம் என்ன சொல்லுங்கள் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன். 


அதற்கு பதில் சொல்லவில்லை, அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமில்லை என்று ஒரு மோடி உருட்டு உருட்டினார் பாருங்கள், பேட்டி எடுத்தவர்களே ஆடிப் போய் விட்டார்கள். பிரதமர் அவர்களே, ஜார்காண்ட் முதலமைச்சர் ஹேமந்த்சோரனை கைது செய்தார்களே உங்களுக்கு தெரியாது தானே.? டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்தார்களே அதுவும் தெரியாது தானே? காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கி உச்ச நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பல்டி அடித்ததே அதுவும் உங்களுக்கு தெரியாது தானே? பாவம் உங்களுக்கு தெரிந்தது ஐ.டி,இ.டி.,சி.பி.ஐ. இதெல்லாம் வைத்துக்கொண்டு எதிர் கட்சிகளை பழி வாங்குவதற்கு. நாட்டு மக்களை தப்புக் கணக்கு போடாதீர்கள். அடுத்தடுத்து இரண்டு பேரீடர்களை சந்தித்தோம். எட்டு மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டது. பாதிப்புகளை சீர் செய்யவும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும் 37 ஆயிரம் கோடி உதவி கேட்டோம். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பிரதமர் வரவில்லையே. நிதியும் தரவில்லையே. 


நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களே, ஓட்டுக்கணக்கு போட்டு பொய்களை அள்ளி வீசினால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்று மனக்கணக்கு போடதீர்கள். கிண்டல், கேளி, ஆணவப்பேச்சு இவைகள் தான் உங்களிடம் உள்ளது. ஒன்று மட்டும் தெளிவாகி விட்டது, பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு கொடுக்க உங்களிடம் பணம் இருக்கிறது, ஆனால் மனம் தான் இல்லை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட திருவண்ணாமலை - சென்னை தினசரி ரயில் மீண்டும் இயக்கப்படும். ஆரணியில் சர்க்கரை ஆலை அமைக்கப்படும் மற்றும் எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவோம். 


திருவண்ணாமலை வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கும், ஆரணி வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தனுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க உங்களை எல்லாம் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். நாற்பதும் நமதே, நாடும் நமதே இவ்வாறு அவர் பேசினார். இதில் கூட்டணி கட்சியினர் அனைவரும் பங்கேற்றனர்.                                  


- அ.மு. முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad