திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை காலத்தில் மக்கள் தாகம் தீர்த்திட திமுக சார்பில் தண்ணீர், மோர் பந்தல்; அமைச்சர் எ.வ.வேலு தகவல். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 26 April 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை காலத்தில் மக்கள் தாகம் தீர்த்திட திமுக சார்பில் தண்ணீர், மோர் பந்தல்; அமைச்சர் எ.வ.வேலு தகவல்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது கோடை காலத்தை முன்னிட்டு பொது மக்களின் தாகம் தீர்த்திட பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தண்ணீர்,மோர் பந்தல்களை திமுக சார்பில் அமைத்திட வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை மற்றும் மேற்கு திசையின் காற்று மாறுபாடு ஆகிய காரணங்களால் கடந்த வாரம் இயல்பு நிலையை விட மூன்று முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. அதனால் ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச அளவாக 108 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கிறது. 


எனவே, கோடை வெப்பத்தை சமாளித்திடவும், பொது மக்களின் தாகம் தீர்த்திடவும், திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திமுகவினர் தண்ணீர், மோர் பந்தல்களை திறந்து விட வேண்டும். தண்ணீர் பந்தல்களில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இளநீர், தர்பூசணி பழம், முலாம் பழம், வெள்ளரி பிஞ்சுகள், குளிர் பானம், மோர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவற்றை போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். 


தண்ணீர் பந்தல்களை உடனடியாக திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்டங்கள், நகர, ஒன்றிய பேரூர் கட்சி நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் அமைத்து மக்கள் தாகம் தீர்க்க உடனடியாக செயல்பட வேண்டும். பொது மக்கள் அதிகம் கூடும் இடமான திருவண்ணாமலை நகரில், கலைஞர் பூங்கா, அறிவொளி பூங்கா, மத்திய பேருந்து நிலையம் அருகில், காந்தி சிலை, அண்ணாமலையார் திருக்கோயில் எதிரில், காந்தி நகர் பைபாஸ் சாலை, திருவள்ளுர் சிலை, காமராஜர் சிலை ஆகிய இடங்களில் அமைத்திட வேண்டும். 


தண்ணீர் மோர் பந்தல்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொது மக்கள் தாகம் தீர்த்திட செயல்பட வேண்டும். கோடை காலம் முடியும் வரை தண்ணீர் மோர் பந்தல்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.                          


- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad