திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம். 5 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு,பக்தர்கள் வசதிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேட்டி. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 22 April 2024

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம். 5 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு,பக்தர்கள் வசதிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேட்டி.


திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம் 23ந் தேதி நடைபெறுகிறது. அதன்படி கிரிவலம் செல்ல உகந்த நேரம் 23ந் தேதி அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி 24ந் தேதி காலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. இந்நிலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 40 லட்சம் பக்தர்கள் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்ரா பவுர்ணமி கிரிவல முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 21ந் தேதி மாலை நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் டிஆர்ஓ பிரியதர்ஷினி,கூடுதல் கலெக்டர் ரிஷப்,கோயில் இணை ஆணையர் ஜோதி,ஏடிஎஸ்பி பழனி,ஆர்டிஒ மந்தாகினி,நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.         


அதை தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது :- சித்ரா பவுர்ணமி நாளில் வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக நகரை இணைக்கும் 9 முக்கிய  சாலைகளில் 13 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. நகராட்சி மூலம் 22 இடங்களிலும்,ஊராட்சி பகுதிகளில் 33 இடங்களிலும் என மொத்தம் 55 இடங்களில் கார்கள் நிறுத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.      


அனைத்து தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் வாகன நிறுத்தும் இடங்களிலும் குடிநீர் வசதி,கழிப்பறைகள்,மின் விளக்குகள்,காவல் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 2800 சிறப்பு பேருந்துகள், 5346 நடைகள் இயக்கப்பட உள்ளது. தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து கிரிவலப்பாதை வரை குறைந்த கட்டணம் ரூ.10/- என்ற அடிப்படையில் தனியார் மினி பஸ் 20 மற்றும் 81 பள்ளிப் பேருந்துக்கள் இயக்கப்பட உள்ளது.


18 வழக்கமான நடைகள், 6 சிறப்பு ரயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக விழுப்புரம், வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக திருக்கோவில் வளாகத்தில் 3 மருத்துவ குழுக்கள் (இதய மருத்துவருடன்) 85 நிலையான மருத்துவ குழுக்களும்,20 எண்ணிக்கையில் 108 அவசர ஊர்தி வாகனங்களும், 15 மொபைல் அவசர ஊர்தியும் நிறுத்தப்படும்.                 


மேலும் பாதுகாப்பு பணிக்காக 2 டி.ஐ.ஜி.க்கள் மற்றும் 5 எஸ்.பிக்கள் உட்பட 5 ஆயிரம் போலீசாரும்,15 தீயணைப்பு வாகனங்களும்,184 தீயணைப்பு வீரர்களும்,பதட்டமான இடங்களாக கருதப்படும் 7 இடங்களில் 50 வனத்துறை வீரர்களும் நிறுத்தப்படுவார்கள்.மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருக்கோயில் வளாகத்திற்குள் 140 கண்காணிப்பு கேமாராக்களும்,கிரிவலப் பாதையை சுற்றி 97 கண்காணிப்பு கேமராக்களும், 24  இடங்களில் காவல் கண்காணிப்பு கேமாராக்களும் அமைக்கப்படும். திருக்கோயில் பிரகாரத்தில் பக்தர்களுக்கு மோர் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்து.இணைய வழியில் அனுமதி பெற்ற 105 இடங்களில் மட்டும் அன்னதானம் செய்ய அனுமதிக்கப்படுவர்.


தற்காலிக பஸ் நிலையங்கள், கிரிவலப்பாதைகளில் சட்டம் ஒழுங்கு, கண்காணிப்பு பணிகளில் 25 நிர்வாக நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவார்கள். கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், தீயணைப்பு மற்றும் வட்டார போக்குவரத்துறை அலுவலகங்களில் கட்டுப்பாறை அறைகள் அமைக்கப்படும். திருக்கோயில் வளாகம், மற்றும் கிரிவலப்பாதையில் போதிய மின்வாரிய பணியாளர்களை பணி ஒதுக்கீடு செய்து பணியில் அமர்த்தப்படுவர். நகரில் மற்றும் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.                       


 அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad