மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. அதன்படி தமிழகத்தில் அடுத்த மாதம் 19ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதனையொட்டி வேட்புமனு தாக்கல் 20ந் தேதி தொடங்கி வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து வரும் 28ந் தேதி வேட்பு மனு பரிசீலனையும்,30ந் தேதி மாலை 5 மணிக்கு வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். 23ந் தேதி சனிக்கிழமை வங்கிகள் விடுமுறை என்பதாலும்,24ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் இரண்டு நாட்கள் மனு தாக்கல் இல்லை. 20ம் தேதி முதல் 27ந் தேதிகளுக்கு இடையே மொத்தம் 6 வேலை நாட்களில் மட்டும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.
திருவண்ணாமலை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக கலெக்டர் பாஸ்கர பாண்டியனும்,ஆரணி தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக டிஆர்ஓ.பிரியதர்ஷினியும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதிகளுக்குட்பட்ட12 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேட்பு மனு தாக்கலின் போது அளிக்க தவறிய ஆவணங்களை பரிசீலனையின்போது அளிக்கலாம். வேட்பாளர் தெரிவிக்கும் சொத்து விபரங்களை பொதுமக்கள் பார்வைக்கு தகவல் பலகையிலும், தேர்தல் ஆணைய இணைய தளத்திலும் வெளியிடப்படும். ஆட்சேபனை இருந்தால் பரிசீலனையின் போது தெரிவிக்கலாம்.
இந்நிலையில் திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்கான வேட்பு மனுக்களை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடமும், ஆரணி தொகுதிக்கான வேட்பு மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள டிஆர்ஒ பிரியதர்ஷினியிடம் அளிக்கலாம். கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு தொகுதிகளுக்கானவேட்பு மனு தாக்கல் நடைபெறுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர் மற்றும் அவருடன் 4 நபர்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய அனுதிக்கப்படுவார்கள்.
- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment