திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த துணை சபாநாயகர் தலைமையில் குழு அமைக்கப்படும். அமைச்சர் எ.வ.வேலு பேச்சு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 29 December 2023

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த துணை சபாநாயகர் தலைமையில் குழு அமைக்கப்படும். அமைச்சர் எ.வ.வேலு பேச்சு.


திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து முறைப்படுத்துதல் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் 28-12-23 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ்,போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி வரவேற்றார். 
                   

கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினரிடம் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்துவது தொடர்பான கருத்துகளை கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது :- திருவண்ணாமலை என்றாலே ஆன்மிகம் நிறைந்த நகரம். இங்குள்ள கோவில்களுக்கு வெளிநாடுகளில் இருந்தும்,வெளி மாநிலங்களிலிருந்தும் பவுர்ணமி நாட்களிலும் மற்ற நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து கிரிவலம் செல்கின்றனர். திருவண்ணாமலை நகரத்தில் தற்போது மக்கள் தொகை அதிகரித்துள்ளது. 


திருவண்ணாமலையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வது தான் அரசின் கடமை. ஆன்மிக மக்கள் அதிக அளவில் வருகை தரும் போது தான் திருவண்ணாமலை பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையும், திருவண்ணாமலையை பொறுத்தவரை 9 இணைப்பு சாலைகள் உள்ளது. அதனால் இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வாய்ப்புகள் உள்ளது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தனியார் அமைப்புகள் மூலம் 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதிநவீன வசதிகளுடன் கழிவறைகள் அமைக்கப்பட உள்ளது.                           


திருவண்ணாமலையில் போலீசாரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனால் திருவண்ணாமலைக்கு கூடுதல் போலீசார் ஏற்படுத்தி தர வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த துணை சபாநாயகர் தலைமையில் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்பினர் கொண்ட 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவின் மூலம் 3 முறை கூட்டம் நடத்தப்படும். அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படாத வகையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கலெக்டர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.                        


கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப்,எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, ஓ.ஜோதி, மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், எஸ்.கே.பி.கல்வி நிறுவனங்களின் தலைவர் கருணாநிதி, தூய்மை அருணை நிர்வாகிகள் கார்த்திக்வேல்மாறன், பிரியா விஜயரங்கன், அருணை கன்ஸ்ட்ரக்ஷன் துரை வெங்கட், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன், துணை தலைவர் பாரதி ராமஜெயம், திருவண்ணாமலை நகர்மன்ற தலைவர் நிர்மலா கார்த்திக்வேல்மாறன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெற்றிவேல், வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஜோதி, நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.                   


- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை 

No comments:

Post a Comment

Post Top Ad