நர்மாபள்ளம் கிராமத்தில் வயலில் இறங்கி பெண்கள் போராட்டம். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 11 December 2023

நர்மாபள்ளம் கிராமத்தில் வயலில் இறங்கி பெண்கள் போராட்டம்.


மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிட கோரி நடந்தது. செய்யாறு தாலுகா மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு மேல்மா, குரும்பூர், நர்மாபள்ளம், காட்டுக்குடிசை, நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீராம்பாக்கம் ஆகிய 9 கிராமங்களை சேர்ந்த சுமார் 3,174 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 9 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பல்வேறு கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 பேரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்திரவிட்டார். மேல்மா சிப்காட் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 


இந்த நிலையில் மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரி நர்மாபள்ளம் கிராமத்தில் உள்ள வயலில் அக்கிராமத்தை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பெண்கள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்த கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். கடந்த மாதம் 25ந் தேதி முதல் விவசாயிகள் தங்களுடைய வீடுகளில் மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி கட்டி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.                          


- அ.மு. முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad