என்னுடைய வீட்டில் ஒரு பைசா கூட பறிமுதல் செய்யவில்லை - அமைச்சர் எ.வ.வேலு பேட்டி. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 8 November 2023

என்னுடைய வீட்டில் ஒரு பைசா கூட பறிமுதல் செய்யவில்லை - அமைச்சர் எ.வ.வேலு பேட்டி.


தமிழக பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு. இவருக்கு சொந்தமான சென்னை, திருவண்ணாமலை உள்பட 5 இடங்களில் 5 நாட்கள் வருமான வரி சோதனை 07-11-23 அன்று நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு தனது இல்லத்தில் நேற்று இரவு நிருபர்களிடம் கூறியதாவது, என்னுடைய கோப்புகளை பார்க்கும் உதவியாளர் சுப்பிரமணி மற்றும் எனது டிரைவரிடம் 5 நாட்களாக கேள்வி என்ற பெயரில் வருமான வரித்துறையினர் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.

கண்ணீர் வரவழைக்கும் விதத்தில் கேள்விகளால் துளைத்து விட்டனர். நான் தனியாக வசிக்கிறேன். எனது மனைவி தனியாக வசிக்கிறார். என் இரு மகன்கள் தனித்தனியாக வசிக்கின்றனர். அனைவரும் வருமான வரி கட்டி வருகின்றனர்.              சென்னை வந்து படத்தொழில் செய்து வந்தேன். பின்னர் விநியோகஸ்தர் ஆனேன். பட தயாரிப்பாளராகவும் ஆனேன். இப்படி நான் ஈட்டிய பணம் மூலம் என் தாயார் சரஸ்வதி அம்மாள் பெயரில் அறக்கட்டளையை துவக்கினேன்.


இந்த அறக்கட்டளை நிறுவனராக இருந்து அதன் மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கி,இன்ஜினியர் கல்வி மூலம் பல இன்ஜினியர்கள் உருவாகி உள்ளனர். நான் பொது வாழ்வில் தூய்மையை கடைபிடிப்பவன். எனது மூத்த மகன் குமரன் தான் சரஸ்வதி அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். எனக்குள்ள சொத்து 48 ஏக்கர் 33 செண்டு. காந்தி நகரில் எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஒரு மருத்துவமனைக்கு 33 ஆண்டுகள் லீசுக்கு வழங்கியுள்ளோம். சென்னையில் ஒரு வீடு உள்ளது. இது தவிர வேறு சொத்து எனக்கில்லை. 


அமைச்சர் ஆன பிறகு  ஒரு செண்ட் நிலம் கூட சொத்தாக சேர்த்துக் கொள்ளவில்லை.காஸா கிராண்ட் மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இப்படியிருக்கையில் எங்களிடம் 5 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனையிடுவது முறையா. பா.ஜ.க.வினர் தொழில் அதிபர்களாக இல்லையா. அவர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு போகாதது ஏன்.? நானோ, தி.மு.க.வினரோ, முதல் அமைச்சரோ இதற்கெல்லாம் பயப்பட போவதுமில்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் அபார வெற்றி பெறுவோம். அதனையே குறிக்கோளாக வைத்து செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கழக முன்னோடிகள் உடனிருந்தனர்.


- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad