கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி ஓட்டல்களில் உணவு பொருட்கள் கையாள்பவர்களுக்கான தடுப்பூசி முகாம். - கலெக்டர் தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 19 November 2023

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி ஓட்டல்களில் உணவு பொருட்கள் கையாள்பவர்களுக்கான தடுப்பூசி முகாம். - கலெக்டர் தொடங்கி வைத்தார்.


திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வர உள்ளதால் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் உணவு கையாள்வோருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.      


திருவண்ணாமலையில் ராமகிருஷ்ணா ஓட்டலில் தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் கார்த்திகை தீபத் திருவிழாவினையொட்டி உணவகங்களில் உணவு பொருட்கள் கையாள்பவர்களுக்கான தடுப்பூசி முகாம் நேற்று(18-11-23) நடைபெற்றது, இந்த முகாமிற்கு சென்னை ஆணையரகத்தின் உணவு பாதுகாப்புத்துறை துணை இயக்குநர் டாக்டர் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை நகர உணவு பாதுகாப்பு அலுவலர் எழில்சிக்கியராஜா வரவேற்றார்.                   


இதில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் முருகேஷ் கலந்துக்கொண்டு உணவகங்களில் உணவு பொருட்கள் கையாள்பவர்களுக்கான தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் தனபாக்கியம் மருத்துவமனை டாக்டர் வெங்கடேஷ் தனபாக்கியம் மற்றும் மருத்துவ குழுவினர் உணவு பொருட்கள் கையாள்பவர்களுக்கு தடுப்பூசியினை செலுத்தினர், அப்போது கலெக்டர் பேசியதாவது, திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 446 உணவகங்களின் உணவு கையாளும் 1200 பணியாளர்களுக்கு தொற்று நோய் தடுப்பதற்கான தடுப்பூசி போடப்பட உள்ளது.                       


உணவகங்களில் உணவு பாதுகாப்பு மேலாண்மை பயிற்சி பெற்ற ஒரு நபர் தொடர்ச்சியாக கட்டாயம் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.உணவகங்களில் சுய உணவு தணிக்கை கையேடு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். பாதுகாப்பான குடிநீரில் உணவு தயாரிக்க வேண்டும். நோய் தொற்று உடையவர்களை உணவகங்களில் வேலைக்கு பணியமர்த்த கூடாது. காலாவதியான பொருட்களை கொண்டு உணவு தயாரிக்க கூடாது. ஏதேனும் உணவு வழங்குவதில் சந்தேகம் இருந்தால் அத்தகைய உணவினை வினியோகிக்க கூடாது. பொது மக்கள் மற்றும் பக்தர்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவகங்கள் மற்றும் சுகாதார சான்று பெற்ற உணவகங்களில் பாதுகாப்பான உணவினை உட்கொள்ள வேண்டும்.


உணவின் தரம் பற்றியோ அல்லது உணவு பொருட்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் உணவு பாதுகாப்பு துறையினரை 9444042322 என்கிற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார், இதில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்பிரமணி, இளங்கோவன், விமல்விநாயகம், ஓட்டல் சங்கத் தலைவர் தனக்கோட்டி, செயலாளர் சதீஷ், பொருளாளர் பாலா, ராமகிருஷ்ணா ஓட்டல் உரிமையாளர் ஜெய்சங்கர், டாக்டர் அருணாசலம் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர் அ.ஏழுமலை மற்றும் ஓட்டல் சங்க நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், ஓட்டல்களில் பணி புரியும் பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.        


- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad