திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 17ந் தேதி (வெள்ளிக்கிழமை)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் முந்தைய 3 நாட்கள் காவல் தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கையம்மன் கோவிலில் துர்க்கையம்மன் உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து நாளை (புதன்கிழமை) அருணாசலேஸ்வரர் கோவில் 3ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடைபெறும். நாளை மறுநாள் (வியாழக்கிழமை)விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 17ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.45 மணியிலிருந்து 6.12 மணிக்குள் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று காலை மற்றும் இரவில் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.
அதேபோல் 2ம் நாள் முதல் 9ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் வீதி உலாவும் இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியாக 7ம் நாளன்று கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு மேல் விநாயகர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சி 26ந் தேதி (10-ம் நாள் விழா) அதிகாலை 4 மணியளவில் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.பின்னர் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகமும் கோவில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர்.
- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment