திருவண்ணாமலையில் பக்தர்கள் அதிகரிப்பால் போலீஸ் பலத்த பாதுகாப்பு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 4 May 2023

திருவண்ணாமலையில் பக்தர்கள் அதிகரிப்பால் போலீஸ் பலத்த பாதுகாப்பு.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமி கிரிவலம் இன்று இரவு 11.59 மணிக்கு தொடங்கி நாளை இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது. பௌர்ணமி கிரிவலம் செல்ல சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, இன்று இரவு பௌர்ணமி தொடங்குவதால் வெளியூர்களில் இருந்து திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர். 


மேலும் இன்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். அருணாசலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் இலவச தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. 


திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி அன்று மூலவரை தரிசனம் செய்ய 4 மணி முதல் 5 மணி நேரம் வரை ஆகும். இதை தவிர்க்க அண்ணாமலையார் சன்னதியில் தரிசனம் செய்த பிறகு விபூதி குங்குமம் வழங்குவதை தவிர்த்து வேறு பகுதியில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் பக்தர்கள் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய முடியும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார். சாமி தரிசனம் முடிந்து செல்லும் பக்தர்கள் வழக்கமாக கோபுரம் வழியாக வெளியே செல்வார்கள். இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் திருமஞ்சன கோபுரம் வழியாகவும் பக்தர்கள் வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் ராஜகோபுரம் மற்றும் கிளி கோபுரம் பகுதியில் ஸ்கேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பக்தர்களின் உடமைகள் முழுமையான சோதனை செய்த பிறகு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் வசதிக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து 1958 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன திருவண்ணாமலை நகரத்தை சுற்றி 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


மேலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. பஸ் நிலையங்களுக்கு செல்ல இலவச பஸ்கள் இயக்கப்படுகிறது. 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்த வசதியாக 55 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. 110 இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. 


கோவில் வளாகத்தில் டாக்டர்கள் அடங்கிய 3 சிறப்பு மருத்துவ குழுக்கள் கிரிவல பாதைகளில் 85 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கோவிலுக்கு வந்து செல்ல ஆட்டோக்களுக்கான சிறப்பு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


அதனை மீறி கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை கிரிவலப் பாதைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக போலீசார் பல்வேறு இடங்களில் தடுப்புகளை அமைத்துள்ளனர். 


அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் 14 கிலோமீட்டர் கிரிவல பாதைகளில் தற்காலிக கழிவறை குடிநீர் வசதி மருத்துவ முகாம்கள் அமைக்கபட்டுள்ளது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவில் மற்றும் கிரிவலப் பாதைகளில் 362 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்


- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை

No comments:

Post a Comment

Post Top Ad