திருவண்ணாமலை, தாளகிரி ஐயர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (64) ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தற்போது விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிப்புரம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது தந்தை ராமச்சந்திரன் தபால் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் எனவே திருவண்ணாமலை தாளகிரி ஐயர் தெருவில் ராமச்சந்திரன் பெயரில் உள்ள பூர்வீக சொத்துகள் அனைத்தும் முறைப்படி பாகப்பிரிவினை செய்யப்பட்டு அவரது மகன் ரமேஷ் மற்றும் அவரது உடன்பிறந்தவர்களின் பெயர்களில் தனித்தனியே கடந்த ஆண்டு பத்திர பதிவு செய்யப்பட்டது.
ஆனாலும் நகராட்சி அலுவலக பதிவேடுகளில் ராமச்சந்திரன் பெயரில் சொத்துக்கள் இருந்ததால் வரி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே பத்திர பதிவு நகல்களை இணைத்து சொத்துகளில் பெயர் மாற்றம் செய்ய ஓய்வு பெற்ற ஆசிரியர் ரமேஷ் கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பித்தார். ஆனால் அந்த மனுவின் மீது நகராட்சி வருவாய் ஆய்வாளர் செல்வராணி மற்றும் வருவாய் உதவியாளர் ராகுல் ஆகியோர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக பலமுறை நகராட்சி அலுவகத்திற்கு நேரில் சென்று முறையிட்டும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் வருவாய் உதவியாளர் ராகுல் ஆகியோர் ரமேஷை தொடர்புக்கொண்டு ரூ.50 ஆயிரம் கொடுத்தால் தான் பெயர் மாற்றம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர். அதற்கு அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ள நிலையில் எதற்காக பணம் தர வேண்டும் என ரமேஷ் கேட்டுள்ளார். ஆனாலும் நகரின் மையப் பகுதியில் சொத்து அமைந்திருப்பதால் அவற்றின் மதிப்பு அதிகமாக உள்ளது. எனவே பெயர் மாற்றம் செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என நெருக்கடி கொடுத்துள்ளனர்.
பின்னர் படிப்படியாக லஞ்ச தொகையை குறைத்து ரூ.30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ்,திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் உண்மைத் தன்மையை உறுதி செய்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி ரூபாய் நோட்டுகளை ரமேஷிடம் 29-5-24 அன்று கொடுத்தனுப்பினர். இந்நிலையில் தாளகிரி அய்யர் தெருவில் உள்ள வீட்டின் முன்பு ரமேஷ் திட்டமிட்டபடி காத்திருந்தார். அப்போது அங்கு வந்த நகராட்சி வருவாய் அலுவலர் செல்வராணி, வருவாய் உதவியாளர் ராகுல் ஆகியோர் ரமேஷிடம் இருந்து ரூ.30 ஆயிரத்தை வாங்கும் போது அங்கு காத்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி வேல்முருகன், எஸ்ஐ கோபிநாத், ஏட்டுகள் தினேஷ், செல்வராஜ் உள்ளிட்ட குழுவினர் லஞ்சம் வாங்கிய செல்வராணி ராகுல் ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் செல்வராணி, வருவாய் உதவியாளர் ராகுல் ஆகியோரை திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்துக்கு அழைத்து சென்று தொடர்ந்து பல மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களுடைய அலுவலக அறையிலிருந்து பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment