திருவண்ணாமலையை அடுத்த தென் மாத்தூரில் உள்ள பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அவருக்கு சொந்த கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு திருவண்ணாமலை அடுத்த தென் மாத்தூர் வேலு நகரில் சுமார் 200 ஏக்கரில் உள்ள அருணை கல்வி நிறுவன வளாகத்தில் வீடு உள்ளது. மேலும், அந்த வளாகத்தில் அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, அருணை பொறியியல் கல்லூரி, அருணை பார்மஸி கல்லூரி, அருணை செவிலியர் கல்லூரி, ஜீவா வேலு பன்னாட்டு பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி, கம்பன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கரன் கலைக் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக் ஆகிய கல்வி நிறுவனங்களும் மற்றும் முகாம் அலுவலகம், சர்வதேச நட்சத்திர விடுதிக்கு இணையான விருந்தினர் மாளிகை (முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தங்கியது) உள்ளன.
திருவண்ணாமலை அடுத்த தென் மாத்தூரில் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள வீட்டின் முன்பு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரி வந்த கார். இதேபோல், திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு ஜீவா வேலு மகளிர் பள்ளி, காந்தி நகர் புறவழிச்சாலை மற்றும் மணலூர் பேட்டை சாலையில் அருணை மருத்துவமனை, பெரிய தெருவில் இலவச தையல் பயிற்சி மையம் நடைபெற்ற குடியிருப்பு, அண்ணா நுழைவு வாயில் அருகே கம்பன் ஐடிஐ, தண்டராம்பட்டு அடுத்த வரகூர் கிராமத்தில் கிரானைட் குவாரி மற்றும் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
மேலும், திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடியில் அருணாச்சலா சர்க்கரை ஆலை இயங்கிய சுமார் 150 ஏக்கர் நிலம், நீதிமன்றம் மூலம் விடப்பட்ட ஏலத்தில் முக்கிய பிரமுகர் ஒருவர் வாங்கி உள்ளார். இதன் பின்னணியில் அமைச்சர் எ.வ.வேலு உள்ளதாக அதிமுக கூறுகிறது. இதற்கு வலு சேர்க்கும் வகையில், அருணாச்சலா நகர் என பெயரிடப்பட்டுள்ள இடத்தில் திமுக சார்பில் கடந்த அக்டோபர் மாதம் 22-ம் தேதி நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
சரஸ்வதி அம்மாள் அறக்கட்டளையின் கீழ் கல்வி நிறுவனங்கள் இயங்குகிறது. இதன் நிறுவனராக இருந்த அமைச்சர் எ.வ.வேலு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, அறக்கட்டளை பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். இந்நிலையில், திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில், நீட் விலக்கு நம் இலக்கு என்ற தலைப்பில் டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் எ.வ.வேலு இன்று(3-ம் தேதி) தொடங்கி வைக்கப்பட இருந்தது. இதற்காக, சென்னையில் முகாமிட்டிருந்தவர், கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள தனது வீட்டுக்கு நேற்று (2-ம் தேதி) இரவு வந்துள்ளார். பின்னர் அவர், இன்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது 25 கார் மற்றும் வேன்களில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன், 75-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், கல்வி நிறுவன வளாகத்தில் காலை சுமார் 6 மணியளவில் நுழைந்தனர். பின்னர் அறக்கட்டளை அலுவலகம், பன்னாட்டு பள்ளி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, வீடு மற்றும் விருந்தினர் மாளிகை என 6 இடங்களில் சோதனையை தொடங்கினர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
கணினிகளில் செய்யப்பட்டிருந்த பதிவேற்றம் மற்றும் ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். அமைச்சர் எ.வ.வேலு, அவரது மனைவி ஜீவா வேலு, மகன் குமரன் மற்றும் இவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளன. இதில், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்ற பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை தொடர்கிறது. திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்.
வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற போதும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கின. அருணை பொறியியல் கல்லூரி மற்றும் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களது கட்டுப்பாட்டில், கல்வி நிறுவன வளாகம் கொண்டு வரப்பட்டன.
அடையாள அட்டை வைத்திருந்த ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அருணை பொறியியல் கல்லூரி மைதானத்தில் மண்டல அளவிலான வாலிபால் போட்டி தடையின்றி நடைபெற்றது. அதே நேரத்தில் வருமான வரித்துறை சோதனை எதிரொலியாக, நீட் தேர்வுக்கு எதிரான டிஜிட்டல் கையெழுத்து இயக்க தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment