கூட்டத்திற்கு முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்றம் கதவு நமக்காக காத்து இருக்கிறது. வெற்றி கனியை பறிக்க தேர்தல் பணிக்கான தொடக்க பணியாக வாக்குச் சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி, ராமநாதபுரம், திருப்பூருக்கு பின் வடக்கு மண்டல மாவட்டங்களின் பொறுப்பாளர்களுக்கான கூட்டம் திருவண்ணாமலையில் நடத்தப்பட்டுள்ளது.
ஒளி மிகுந்த ஊரில் உங்கள் முகங்களை பார்க்கும் பொழுது உதயசூரியனை பார்ப்பது போல் உள்ளது. உங்களை பார்க்கும்பொழுது புதிய உணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படுகிறது. ஒரு நாள் ஒரு வாரம் என முழுவதும் உழைத்திட்டாலும் மறுநாள் திமுக உடன்பிறப்புகளுடன் இருக்க போகிறோம் என்ற எண்ணம் வரும். புதிதாக ஒரு எனர்ஜி வரும். நீங்கள் என்னுடைய சீக்ரட் ஆப் மை எனர்ஜி. திருவண்ணாமலையும் தீபமும் போன்று தான் திருவண்ணாமலையும் திமுகவையும் யாராலும் பிரிக்க முடியாது.
திமுக உருவான பொழுது நடந்தபொதுக்கூட்டத்தில் ரூ.1451 வசூலானது. அதில் ரூ.100/-ஐ இதே திருவண்ணாமலையை சேர்ந்த ப.உ.சண்முகம் வழங்கினார்.1951ம் ஆண்டில் நடந்த தேர்தலில் நாம் முதன்முதலாக போட்டியிடுகிறோம். அதில் 15 பேர் வெற்றி பெற்றோம். அந்த 15 பேர்களில் பா.உ.சண்முகம், சந்தானம், களம்பூர் அண்ணாமலை என 3 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். முதல் நாடாளுமன்ற தேர்தலில் 2 பேர் வெற்றி பெற்றனர்.
அதில் ஒரு தொகுதி திருவண்ணாமலை தொகுதி. அவர் இரா.தர்மலிங்கம். அப்படிப்பட்ட பா.உ.ச.மற்றும் இரா.தர்மலிங்கம் ஆகியோருக்கு அமைச்சர் எ.வ.வேலுவின் முயற்சியால் மாவட்ட திமுக சார்பில் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திமுக விற்கு திருப்புமுனை தந்தது 1963ம் ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற இடை தேர்தல் தான். அந்த வெற்றி தான் 1967ல் தி.மு.க. ஆட்சி அமைக்க அடித்தளமாக இருந்தது.அதேபோல் 2021ம் ஆண்டு தேர்தலின் போது நமது வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டம். அந்த பயணத்தை திருவண்ணாமலையிலிருந்து தான் தொடங்கினேன்.
அதன் பின்னர் தொகுதி தொகுதியாக பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினேன். ஆட்சி அமைத்ததும் 100 நாட்களில் தீர்வு காண்பேன் என்று கூறினேன். ஸ்டாலினிடம் மனு கொடுத்தால் நிச்சயமாக நிறைவேறும் என்று லட்சக்கணக்கான மக்கள் மனு அளித்தனர். திமுகவின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்த ஊர் தான் திருவண்ணாமலை என்பதனை பெருமையோடு சொல்ல விரும்புகிறேன். இந்த வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு எழுச்சியோடு நடத்தியதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். எதையும் யாரும் ஏவாமலேயே செய்யக்கூடியவர் வேலு என்று தலைவர் கருணாநிதி பாராட்டினார்.
திருவாரூரில் கலைஞர் கோட்டம், மதுரையில் கலைஞர் நூலகம், சென்னையில் பல்நோக்கு கலைஞர் நூற்றாண்டு மருத்துமனை இவையெல்லாம் எவ்வாறு அமைய வேண்டும் என்று என் எண்ணத்திற்கு ஏற்ப அமைத்தவர் தான் வேலு. கழகத்தினுடைய விழா வேந்தர் என்று கருணாநிதி சிலை திறப்பு விழாவின் போது நான் கூறினேன். அவருக்கு தோளோடு தோள் கொடுத்து பணியாற்றும் நிர்வாகிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த மார்ச் 22ந் தேதி அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் இருந்தே நாம் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். இதோடு 4 வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டை நடத்தியிருக்கிறோம். இன்னும் சென்னை மண்டலம் மண்டலம் மட்டும் தான் பாக்கி இருக்கிது. தேர்தலுக்கு முன்பு இருந்ததை விட 5,6 மாதங்களுக்கு முன்பு நான் சுற்றுப் பயணம் செய்த போது இருந்த மகிழ்ச்சியை விட, உணர்ச்சியை விட,வரவேற்பை விட இப்போது கடந்த 2 மாத காலமாக எங்கு பார்த்தாலும் பெண்கள் அலை மோதுகிற அந்த கூட்டத்தை நான் கண்கூடாக பார்க்கிறேன். என்ன காரணம்? 1000/- ரூபாய் அது இன்றைக்கு மகளிரை காத்திருக்கிறது. வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, நம்மை எதிர்த்தவர்கள் இப்போது பாராட்டுகிறார்கள்.
இது நம்முடைய எதிரிகளை அச்சமடைய வைத்திருக்கிறது. சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அது பேச்சு அல்ல. வயிற்றெரிச்சல். தி.மு.க.ஆட்சிக்கு வந்து எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்று பேசியிருக்கிறார். இந்த 2 1/2 ஆண்டு கால சாதனைகளை சொல்ல ஆரம்பித்தால் அதற்கே 2 மணி நேரமாகும். அவ்வளவு சாதனைகளை செய்திருக்கிறோம். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த, பச்சைப் பொய்யர்' பழனிசாமி, சொன்னதிலேயே பெரிய பொய் எது என்றால் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை தான் ரிப்பன் வெட்டி நாம் தொடங்கி வைக்கிறோமாம். பிளான் போட்டு, கட்டி முடித்து வைத்து விட்டார்களாம். நாம் சென்று ரிப்பன் வெட்டி விட்டு வந்து விட்டோமாம்.
நான் கேட்கிறேன், மகளிருக்கு ரூ.ஆயிரம் கொடுக்கிறோமே. அது நீங்கள் போட்ட திட்டமா? பெண்களுக்கான இலவச பஸ் பயணத்திட்டம் நீங்கள் போட்ட திட்டமா? காலை சிற்றூண்டித் திட்டம்,யார் போட்டத் திட்டம்,புதுமை பெண் திட்டத்தில் மாணவியருக்கு ரூ.1000/- தருகிறோமே. இது பழனிசாமியின் திட்டமா. லட்சக்கணக்கான மாணவர்களை முன்னேற்றும் ' நான் முதல்வன் திட்டம்' அ.தி.மு.க.திட்டமா? ஆட்சிக்கு வந்து 1000 நாட்கள் கூட ஆகவில்லை.ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தியிருக்கும் ஆட்சி தான் நம்முடைய திராவிடல் மாடல் ஆட்சி.
இது எதுவும் பழனிசாமி கண்ணுக்கு ஏன் தெரியவில்லை?தெரிந்துக்கொள்ள விரும்பவில்லையா? இல்லை, இன்னும் தரையிலேயே தான் ஊர்ந்துக் கொண்டு இருக்கிறாரா? தலையை கொஞ்சம் தூக்கி பாருங்கள்.தமிழ்நாடு மாறிக்கொண்டு இருக்கிறது. நான்காண்டு காலம் ஆட்சி அதிகாரம் இருந்த போது மக்களுக்காக அவர் எதையுமே செய்யவில்லை. அவரின் ஆட்சியில் தமிழ்நாட்டு நலன்களும், உரிமைகளும் பா.ஜ.க.விடம் அடகு வைத்து காவு கொடுக்கப்பட்டு விட்டது.
மக்களை பிளவுபடுத்தி அடிமைப்படுத்தும் பாசிச பா.ஜ.க.விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்களத்திற்கு இந்த திருவண்ணாமலை பாசறை கூட்டமானது நல்ல வழிகாட்டியாக அமையட்டும்.நிறைவாக தீபம் தெரிவது போல் இந்தியாவிற்கான நம்பிக்கை ஒளி தெரிகிறது. இந்தியா வாழ்க.இந்தியா கூட்டணி வெல்க. நாற்பதும் நமதே, நாடும் நமதே இவ்வாறு அவர் பேசினார்.
- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை
No comments:
Post a Comment