திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் குறை தீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்துக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
இதனால் ஏரி,குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர் வர வேண்டும்.கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 10 ஏக்கருக்கு ஒரு இடத்தில் தடுப்பணை அல்லது குளம் வெட்ட வேண்டும்.பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்த அனைத்து விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரண உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரங்கள் தட்டுபாடின்றி வழங்க வேண்டும்.
இணை பொருட்கள் வாங்கினால் தான் யூரியா வழங்கப்படும் என்று கூறும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகளுக்கான நலத் திட்டங்கள் அடங்கிய கையேட்டினை கலெக்டர் வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது :- திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 53 பிர்காக்கள் 1000 முதல் 1200 அடிக்கு கீழ் நிலத்தடி நீர் சென்று பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது. இதையடுத்து பண்ணை குட்டை அமைத்தும் செயல்படாத ஆழ்துளை கிணறுகள் மூலம் மழை நீர் சேகரிப்பு போன்ற நடவடிக்கைககளால் தற்பொது நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு பண்ணை குட்டை அமைக்கப்பட்டதன் விளைவாக இந்த ஆண்டு எடுக்கப்பட்ட நிலத்தடி நீர்மட்டம் கணக்கெடுப்பின் படி பாதுகாப்பற்ற நிலையில் இருந்த பிர்காக்களில் 13 பிர்காக்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையினால் நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து உயர வாய்ப்பு உள்ளது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தற்போது கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டத்தின் மூலம் கிணறுகள் வெட்டப்பட்டு வருகிறது.மேலும் அரசின் மூலம் வெட்டப்படும் கிணறுகளுக்கு விவசாயிகள் இடம் கொடுக்க முன் வர வேண்டும். நிலத்தடி நீர் மட்டத்தை உய்ர்த்தும் வகையில் கிணறுகள் அருகில் மழைநீர் சேகரிப்பு குழிகள் ஏற்படுத்த வேண்டும். மேலும் வருகிற அக்டோபர் மாதத்தில் அரசின் சார்பில் வேளாண் விவவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் முதல் அமைச்சர் கலந்துக் கொள்ள உள்ளார். இதில் விவசாயிகள் மூலம் விற்பனை அங்காடி வைக்க விருப்பம் உள்ளவர்கள் இன்னும் ஒரு வாரத்திற்குள் பெயர் விபரம் தெரிவிக்க வேண்டும்.
வேளாண் பொறியியல் துறையின் மூலம் 50 சதவிகிதம் மானியத்தில் உரங்கள் தெளிக்க பயன்படுத்தும் டிரோன் கருவி வழங்கப்பட இருக்கிறது. இதனை விவசாயிகள் பயன்டுத்திக்கொள்ளலாம். மேலும் 2022-23 ம் ஆண்டிற்கான பயிர் சேதத்திற்கான இழப்பீடு தொகை மாநிலத்திற்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குநர் அரக்குமார், மண்டல இணை இயக்குநர் சோமசுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமாபதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கவுரி மற்றும் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.
- அ.மு.முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை.
No comments:
Post a Comment